சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர். ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடரில் அசத்திய அவர் கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடத் தேர்வானார். அதில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய அவர் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதற்கு உதவினார். அப்படியே 2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் அதன் பின் காயமடைந்து வெளியேறினார்.
இருப்பினும் தற்போது குணமடைந்துள்ள கிஷோர் டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் அணியை கேப்டனாக எலிமினேட்டர் போட்டி வரை அழைத்துச் சென்றார். அதை தொடர்ந்து புஜ்ஜி பாபு தொடரில் விளையாடும் அவர் அடுத்ததாக துலீப் கோப்பையில் விளையாட உள்ளார்.
இந்நிலையில் இந்தியாவிலேயே தாம் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் என்று கருதுவதாக சாய் கிஷோர் கூறியுள்ளார். எனவே தமக்கு அடுத்து நடைபெறும் வங்காளதேச டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கொடுக்குமாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "தற்போது நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் உள்ளேன். ஏனெனில் இந்தளவுக்கு நான் தொடர்ச்சியாக பயிற்சிகள் எடுத்ததில்லை. ஒருவேளை ஐபிஎல் தொடருக்கு முன் இப்படி செய்திருக்கலாம். 4 மணிக்கு எழுந்து பயிற்சி செய்து பின்னர் பவுலிங் போடுவேன். இருப்பினும் கடந்த 4 - 5 வருடங்களில் இந்தளவுக்கு நான் மணிக்கணக்கில் பயிற்சிகளை எடுத்ததில்லை. ஐபிஎல் தொடரின்போது புத்துணர்ச்சியடைய வேண்டும் என்பதால் போதுமான நேரம் கிடைக்காது. டிஎன்பிஎல் முடிந்ததும் 15 - 20 நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்டேன்.
அதனால் தற்சமயத்தில் நமது நாட்டிலேயே நான் என்னை ஒரு சிறந்த ஸ்பின்னராக உணர்கிறேன். அதனால் என்னை டெஸ்ட் போட்டியில் போட்டால் அதற்கு நான் தயார். எதற்காகவும் கவலைப்படவில்லை. இதற்கு முன் ஜடேஜாவுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இணைந்து விளையாடவில்லை. எனவே அவருடன் சேர்ந்து தற்போது விளையாட உள்ளது நல்ல அனுபவமாக இருக்கும். எனவே தன்னம்பிக்கையுடன் இருக்கும் நான் எப்போதையும் விட தற்போது தயாராக உள்ளேன்" என்று கூறினார்.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/vqyTYe2
via IFTTT
0 Comments