ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அதேவேளை, தேர்தலை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் பாதுகாப்புடன் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சிகள் கொடுப்பதை தடுக்கவும், சோதனைக்காகவும் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர், வாட்டர்கெம் பகுதியில் இன்று மாலை பாதுகாப்புப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதி, பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதையடுத்து பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து கை துப்பாக்கி, கையெறி குண்டுகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/o3TG1uS
via IFTTT
0 Comments