சென்னை,
தமிழக தலைவர் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டது. இதன்மூலம் சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதன் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு அந்த கணக்கெடுப்பு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் 2021-ல் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் 2011-ல் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாததற்கு சால்ஜாப்பு காரணங்களைக் கூறி வெளியிட மறுத்து விட்டது.
அரசமைப்புச் சட்டப்படியும், இந்திய கணக்கெடுப்பு சட்டம் 1948-ன் படியும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மத்திய அரசே தவிர, மாநில அரசு அல்ல. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்கிற வகையில் மாநில அரசு நடத்த வேண்டும் என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கோருவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத செயலாகும். பா.ஜனதாவை காப்பாற்றுகிற முயற்சியாகும்.
எனவே, மத்திய பா.ஜனதா அரசு 2021-ல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் 3 ஆண்டுகள் காலம் தாழ்த்தி வருகிற நிலையில் உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/3kIS1hD
via IFTTT
0 Comments