செய்திகள்

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 236 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 85.3 ஓவர்களில் 358 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.இதனையடுத்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 54 ஓவர் முடிந்திருந்தபோது 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து 65 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கமிந்து மென்டிஸ் (52 ரன்), மிலன் ரத்னாயகே (7 ரன்) களத்தில் இருந்தனர். அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அன்றைய நாளில் தினேஷ் சண்டிமால் (11 ரன்), பந்து தாக்கி விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறினார்.இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிலன் ரத்னாயகே 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து காயம் காரணமாக வெளியேறிய சண்டிமால் கமிந்து மென்டிசுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பால் இலங்கை 300 ரன்களை கடந்தது. அரைசதம் அடித்த சண்டிமால் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய கமிந்து மென்டிஸ் சதமடித்து 113 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வரிசையில் யாரும் நிலைக்கவில்லை. இதன் மூலம் இலங்கை 2-வது இன்னிங்சில் 326 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர் பென் டக்கெட் 11 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஆலி போப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிலைத்து ஆடிய டான் லாரன்ஸ் 34 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார். நிலைத்து ஆடிய அவர் அரைசதமடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 



from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/OIdYqAB
via IFTTT

Post a Comment

0 Comments