சென்னை,
ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வந்த மகாவிஷ்ணு சென்னையில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கருத்துகளால் சர்ச்சையில் சிக்கினார். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆன்மிக குரு என்பவர் யார்? என்று இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான அந்த வீடியோவில், "என்னங்க இது.. யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு நான் ஆன்மிக குரு என்று பேசினால் கண்டதை எல்லாம் பேசிக்கொண்டு உடனே நீங்கள் ஒப்புக்கொண்டு பெட்ஷிட் எல்லாம் எடுத்து கொண்டு நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு முன்பு போய் உட்கார்ந்து கேட்பீர்களா.
உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை. அவரே உங்களை தேடி வருவார். உங்களுடைய சந்திப்பு தானாக நடக்கும். டிவியில் விளம்பரம் செய்து கொண்டு, மைக் எல்லாம் வைத்து கொண்டு யாரும் இருப்பது இல்லை. உண்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்தி கொள்ளவே மாட்டார். என்னங்க நீங்க அவ்வளவு காஞ்சிபோயா இருக்கீங்க.. தியானம் பண்றதற்கு.
முதலில் ஒன்றை சொல்லி கொள்கிறேன். தியானம் தான் உலகத்திலேயே மிகவும் எளிமையான விஷயம். உலகில் உள்ள எல்லா மதங்களும் போதிக்கிறது.. கடவுள் உங்களிடம் இருக்கிறான் என்பதை தான். இதற்கு புத்தர் சொல்லும் தியானம் தான் ஈஸியான வழி. நாசில் (மூக்கில் இருக்கும் துளைகள்) என்று சொல்வோம். அது காற்று செல்லும் இடமாகும். அதில் நினைப்பை வையுங்க. மூச்சு விடுவது, மூச்சு இழுக்கிறது பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. அது எல்லாம் தன்னாலே நடக்கும்.
இடையில் வேறு ஏதேனும் நினைப்பு எல்லாம் வந்தால் அதனை அடக்க வேண்டும் என்று நினைக்காதீங்க.. அந்த நினைப்பு எல்லாம் தன்னாலே வரும். சிறிது நேரத்தில் தன்னாலே சென்றுவிடும். அப்புறம் மனசை நீங்க மீண்டும் கொண்டு வாங்க. புத்தர் வந்து இதை தான் சொல்கிறார். நீங்கள் நீச்சல் அடித்து கொண்டே இருந்தால் உங்களுக்கு நீச்சல் நன்றாக வந்துவிடும். இதற்கு மாற்று கருத்து ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். நான் கேட்டு கொள்கிறேன். ஆனால் மாற்றுக்கருத்து என்பது எதுவும் இல்லை" என்று அதில் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் மகாவிஷ்ணு ஆன்மிக உரையாற்றி சர்ச்சையாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளதால் அவருக்கு செல்வராகவன் பதிலடி கொடுத்துள்ளாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/T3CQm0E
via IFTTT
0 Comments