புதுடெல்லி,
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் ரூ.5 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை எடுத்த இந்த முடிவால் நாடு முழுவதும் உள்ள 4.5 கோடி குடும்பங்கள் பயனடையும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
• 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) இன் கீழ் ஒரு தனித்துவமான அட்டையைப் பெறுவார்கள்.
• ஏற்கனவே AB PM-JAY இன் கீழ் உள்ளவர்கள், குறிப்பாக அவர்களது குடும்பங்களில் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கூடுதலாக பெறுவார்கள்.
• பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து ஏற்கனவே பயனடையும் மூத்த குடிமக்கள் தங்களின் தற்போதைய திட்டத்தைத் தொடரலாம் அல்லது AB PM-JAY இன் கீழ் புதிய காப்பீட்டை தேர்ந்தெடுக்கலாம்.
• ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்பது உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி சுகாதார உறுதித் திட்டமாகும்.
• இது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு வழங்குகிறது.
• குடும்ப உறுப்பினர்களின் வயதைப் பொருட்படுத்தாமல், 12.34 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி மக்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியது.
• இத்திட்டத்தின் கீழ் 7.37 கோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பயனாளிகளில் 49 சதவீதம் பேர் பெண்கள் என அரசு அறிக்கை கூறியுள்ளது.
• இதுவரை, இந்த சுகாதாரத் திட்டம் மூலம் பொதுமக்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/O1VFuXz
via IFTTT
0 Comments