புதுடெல்லி,
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. போட்டி முடிவில் ஆண்கள் அணி 19 புள்ளிகளையும், பெண்கள் அணி 17 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.
செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கம் வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிலையில் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏ.ஐ.சி.எப்.) சார்பில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவின் போது, வரலாற்று சிறப்புமிக்க 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.3.2 கோடியை வெகுமதியாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஏ.ஐ.சி.எப். தலைவர் நிதின் நரங் கூறுகையில், "ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.25 லட்சமும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் பயிற்சியாளர்களான அபிஜீத் குண்டே மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சமும், துணை பயிற்சியாளருக்கு ரூ.7.5 லட்சமும் பரிசாக வழங்கப்படும். எங்கள் வீரர்கள் சதுரங்கப் பலகையில் ஷார்ப் ஷூட்டர்கள். விஸ்வநாதன் ஆனந்த் விதைத்த விதைகள் காடாக வளர்ந்துள்ளன" என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். .
ஏ.ஐ.சி.எப். பொதுச்செயலாளர் தேவ் ஏ படேல் கூறுகையில், "வரலாற்று சிறப்புமிக்க இரட்டை தங்கப் பதக்கங்கள் நாட்டிற்கு ஒரு சதுரங்கப் புரட்சியைக் கொண்டுவர உதவும். 97 வருட செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இரண்டு பிரிவுகளிலும் தங்கம் வென்றோம். இது ஒரு வரலாற்று சாதனை. இது செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். அடுத்த தலைமுறை செஸ் வீரர்களை ஊக்குவிக்க இந்த வேகத்தை பயன்படுத்துவோம்" என்று அவர் கூறினார்.
இந்தியா சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/Urcnkpx
via IFTTT
0 Comments