செய்திகள்

புது டெல்லி,

மராட்டியத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் முடிவுகள் கடந்த நவம்பர் 23-ந்தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 235 இடங்களை பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி கைப்பற்றியிருந்தது. தேர்தலில் 132 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 57 மற்றும் 41 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இந்த தேர்தலில், மகா விகாஸ் அகாடி கூட்டணியானது படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா (உத்தவ் பால் தாக்கரே) 20 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் அணி) 10 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.

இந்த சூழலில், முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க.வுக்கு வழங்க கூட்டணி கட்சி தலைவர்கள் ஒப்பு கொண்டனர். இதனை தொடர்ந்து, மராட்டிய பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, மராட்டியத்தில்முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றார். அவருடன் புதிய மந்திரி சபையில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர். மும்பையிலுள்ள ஆசாத் மைதான் பகுதியில், பிரதமர் மோடி முன்னிலையில் இந்த பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெறுற்றது.

இந்நிலையில் முதல்-மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்ற சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;

மராட்டியத்தின் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸுக்கு வாழ்த்துக்கள். மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார்க்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த அணி அனுபவம் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றின் கலவையாகும், மேலும் இந்த அணியின் கூட்டு முயற்சியால் மராட்டியத்தில் மகாயுதிக்கு ஒரு வரலாற்று ஆணை கிடைத்துள்ளது. மாநில மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும், நல்லாட்சி நிலவுவதை உறுதி செய்யவும் இந்த குழு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும். மராட்டியத்தின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கு மத்தியில் அனைத்து ஆதரவையும் நான் உறுதியளிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/Yg09iA2
via IFTTT

Post a Comment

0 Comments