செய்திகள்

புதுடெல்லி,

ரஷியாவின் மாஸ்கோ நகரில் கடந்த ஜூலையில் 22-வது வருடாந்திர உச்சி மாநாடு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சென்றார். 3-வது முறையாக அவர் பொறுப்பேற்ற பின்பு ரஷியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் அதுவாகும். இந்த பயணத்தின்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அதனை ரஷிய அதிபர் புதினும் ஏற்று கொண்டார். இந்நிலையில், அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் 2025-ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக புதின் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

இதுபற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷியாவின் கிரெம்ளின் மாளிகையின் உதவியாளரான யூரி உஷாகோவ் கூறும்போது, பிரதமர் மோடியிடம் இருந்து, இந்தியாவுக்கு வருவதற்காக ரஷிய அதிபர் புதினுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது.

இந்த பயணத்திற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று கூறினார். இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகமும் இந்த பயணம் பற்றி உறுதி செய்துள்ளது. இந்த சூழலில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.

அவர் பேசும்போது, வருடாந்திர உச்சி மாநாடு நடத்துவதற்காக ரஷியாவுடன் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். கடைசி வருடாந்திர உச்சி மாநாடு மாஸ்கோ நகரில் நடந்தது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி மாஸ்கோ நகருக்கு சென்றார்.

அடுத்த வருடாந்திர உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான தேதியை முடிவு செய்யும் விசயங்கள், தூதரக உறவுகள் வழியே நடைபெற்று வருகின்றன என்றார். இதன்படி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதினின் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே 2022-ம் ஆண்டு போர் தொடங்கிய பின்பு இந்தியாவுக்கு புதின் மேற்கொள்ள உள்ள முதல் பயணம் இதுவாகும். இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி மற்றும் தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது.



from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/Q9bCz63
via IFTTT

Post a Comment

0 Comments