சென்னை,
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் மற்றும் வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், 3-வது வரிசையில் களம் கண்டு கடைசி வரை நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய திலக் வர்மா அணியை கரைசேர்த்தார். 19.2 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. திலக் வர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆட்ட நாயகன் திலக் வர்மா போட்டி முடிந்து அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்தது. நேற்று கம்பீர் சாருடன் நான் பேசினேன். அப்போது எது நடந்தாலும் நீங்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் வளைவுத்தன்மையுடன் விளையாட வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார். இது போன்ற மைதானங்களில் இடது வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது நல்ல தேர்வு. பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது. அவர்களும் லைன், லென்த் ஆகியவற்றை மாற்ற வேண்டி இருந்தது.
ஷார்ட் பந்துகளுக்கு எதிராக நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே விளையாடியுள்ளோம். சொல்லப்போனால் இங்கே வீசப்பட்ட அந்த பந்துகளை விட அங்கே வீசப்பட்டது கடினமாக இருந்தது. ஆர்ச்சருக்கு எதிராக நாங்கள் தயாராக வந்தோம். ஆனால் அவரும் மார்க் வுட்டும் வேகமாக வீசினார்கள். வலைப்பயிற்சியில் நாங்கள் கடினமாக உழைத்தது இங்கே நல்ல முடிவை கொடுத்தது. இடைவெளியை பார்த்து அடியுங்கள் என்று பிஸ்னோயிடம் சொன்னேன். அதைப் பின்பற்றி அவர் விளையாடியது அற்புதமானது. அது போட்டியை பினிஷிங் செய்ய எனக்கு எளிதாக இருந்தது" என்று கூறினார்.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News | Online Tamil News | News In Tamil | Live Tamil News - Daily Thanthi | Tamil News Paper https://ift.tt/xN5F013
via IFTTT
0 Comments