
இளையான்குடி,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகருகே உள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் மகள் சோபிதா (8) அப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது சகோதரர் கண்ணன் மகள் கிறிஸ்மிகா (4) அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தார்.
இன்று பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு சென்ற இரு குழந்தைகளும் காலை 10 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க அருகேயுள்ள கண்மாய்க்கு சென்றனர். இதனை ஆசிரியரும், அங்கன்வாடி மைய ஊழியரும் கவனிக்கவில்லை. இந்த சூழலில், இவர்களது பெற்றோர் மதிய உணவு இடைவேளைக்காக இரு சிறுமிகளையும் அழைத்து செல்ல வந்தனர்.
அப்போது, இரு சிறுமிகளும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளையும் தேடியபோது பள்ளியின் எதிரே இருந்த கண்மாயில் இரு சிறுமிகளின் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமிகளின் உடல்களை உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாக இருந்த ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியதுடன் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் உடல்களை இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனிடையே சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர் தாய்மேரி மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஆகியோரை பணிநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online | Today News In Tamil | Tamil News Live - Daily Thanthi | Tamil News Paper | Breaking Tamil news | தமிழ் செய்தி | தமிழ் நியூஸ் https://ift.tt/VGR7qsE
via IFTTT
0 Comments