
மதுரை,
மதுரை மாவட்டம் தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முழு கட்டுமான திட்டத்தையும் பிப்ரவரி 2027 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மதுரை எய்ம்ஸ் முதன்மை இயக்குனர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இது தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில மக்களுக்கு சிறந்த சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கான நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் பரந்த வளாகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டப்பட்டு வருகிறது. மே 22, 2024 அன்று தொடங்கப்பட்ட இந்த கட்டுமானத் திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவடையும்.
முதற்கட்டத்தில் கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ / மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டிடங்கள் போன்ற முக்கிய வசதிகள் அடங்கி உள்ளன. இந்த முதற்கட்டப் பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. முதற்கட்டப் பணிகள் தொடக்க தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். முழு கட்டுமானத் திட்டத்தையும் பிப்ரவரி 2027 க்குள் 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, ஒட்டுமொத்தமாக கட்டுமானத்தில் 14.5 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. நீடித்த நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் எரிசக்தி செயல்திறனை வலியுறுத்தி, IGBC Gold மதிப்பீட்டை அடைவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் வளாகம் நோயளிக்களுக்கனான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுள்ள 900 படுக்கைகளில் 150 படுக்கைகள் பிரத்யேகமாக தொற்று நோய்க்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்வி வளாகம், மருத்துவமனை வளாகம், விடுதி வளாகம், குடியிருப்பு வளாகம், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் ஆகியவை அடங்கியுள்ளன. இது மாணவர்கள் மற்றும் நோயாளிகள் இருவருக்கும் ஒரு முழுமையான தன்னிறைவை உறுதி செய்கிறது.
வளர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணிச்சேர்க்கையும் படிப்படியாக நடந்து வருகிறது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஆசிரியர் பற்றாக்குறையின்மையையும் மற்றும் உயர் கல்வித் தரத்தையும் உறுதி செய்கிறது. தற்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ராமநாதபுரத்திலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அதன் நிரந்தர வளாகத்திற்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.
மதுரை எய்ம்ஸ் மற்றொரு சுகாதார மையம் மட்டுமல்ல - இது தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ பராமரிப்பு, மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தரமான கல்வி வழங்க வேண்டுமென உறுதிக் கொண்டுள்ளது. நீடித்த நிலையான முன்னேற்றம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்புடன், இந்த நிறுவனம் பிராந்தியத்தின் சுகாதார நிலப்பரப்பாக மாற்றத் தயாராக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online | Today News In Tamil | Tamil News Live - Daily Thanthi | Tamil News Paper | Breaking Tamil news | தமிழ் செய்தி | தமிழ் நியூஸ் https://ift.tt/kf8G1i0
via IFTTT
0 Comments