செய்திகள்

முல்லன்பூர்,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் முல்லன்பூரில் இன்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாபின் தொடக்க வீரர்களாக ப்ரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன், ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் புகுந்த ஸ்ரேயாஸ் ஐயர் ரன் எடுக்காமலும், ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்னிலும், நேஹல் வதேரா 10 ரன்னிலும், மேக்ஸ்வெல் 7 ரன்னிலும், இம்பேக்ட் வீரராக களம் புகுந்த சூர்யாஷ் ஷெட்ஜே 4 ரன்னிலும், மார்கோ ஜான்சென் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

தொடர்ந்து ஷஷாங் சிங் மற்றும் பார்ட்லெட் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷஷாங் சிங் 18 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

இந்த ஆட்டத்தை கொல்கத்தா அணி எளிதில் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குவிண்டன் டிகாக் 2 ரன்களிலும், சுனில் நரேன் 5 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

ரஹானே - ரகுவன்ஷி ஜோடி சற்று நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதையடுத்து சாஹல் பந்துவீச்சில் ரஹானேவின் விக்கெட் வீழ்ந்தது. இந்த ஜோடி பிரிந்த பின்னர் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது.

இதில் சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேக்ஸ்வெல் பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் ஆண்ட்ரே ரஸல் 2 சிக்ஸர்களையும், 1 பவுண்டரியையும் பறக்கவிட்டு கொல்கத்தா அணிக்கு சற்று நம்பிக்கை அளித்தார். இறுதியில் மார்க்கோ ஜான்சன் வீசிய பந்தில் ரஸல் போல்ட் ஆனார்.

இதையடுத்து கொல்கத்தா அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மார்க்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குறைந்தபட்ச ஸ்கோரை டிபெண்ட் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது. 



from DailyThanthi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/cIGDmXC
via IFTTT

Post a Comment

0 Comments