
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 14-ந் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கலானது. மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 9-ந் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சட்டசபைக்கும் 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. அதாவது, 10-ந்தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால் சட்டசபை கூட்டம் இல்லை. 11-ந்தேதி சட்டசபைக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. 12 மற்றும் 13-ந்தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டசபை கூட்டம் கிடையாது.
நேற்று (14-ந் தேதி) தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த தினம் என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டது. இப்படி, 5 நாட்கள் சட்டசபைக்கு தொடர்ந்து விடுமுறை வந்தது.
5 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தமிழக சட்டசபையில் இன்று மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார். இம்மாதம் 29-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
from DailyThanthi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/DOEwCax
via IFTTT
0 Comments