
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று பொறுப்பேற்றுள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும், மாநில தலைவருக்கான சான்றிதழையும் அவர் பெற்றுக்கொண்டார்.
அதேவேளை, தமிழக பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வந்த அண்னாமலை அந்த பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டார். அவருக்கு பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, பா.ஜ.க. மாநில தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என்று சபதம் எடுத்தார்.
இந்த சூழலில், பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சி மேடையில் அண்ணாமலைக்கு செருப்பு வழங்கினார். தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன் என்று கூறிய அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் வேண்டுகோளை ஏற்று செருப்பு அணிந்து கொண்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "2026-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்று முதல் நான் பா.ஜ.க.வின் சாதாரண தொண்டன். மாநிலத் தலைவர் சொல்வதை கேட்பது எங்கள் கடமை. மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன். நிச்சயமாக தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.
from DailyThanthi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/zRYIyeh
via IFTTT
0 Comments