செய்திகள்

திருச்சி,

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த டிசம்பர் 23-ந்தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அடையாறு பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்த கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன்(வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் குற்றச்செயல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். தண்டனை விவரங்கள் வந்த பின்னர் அது குறித்து நாம் கருத்து சொல்ல முடியும். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை எதிர்க்கட்சியினர் கூறுவது வியப்பாக உள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் தி.மு.க. தலையிட்டது என்ற கருத்தை ஏற்க முடியாது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/8nfCpTs
via IFTTT

Post a Comment

0 Comments