
கொராபுட்,
ஒடிசாவின் கொராபுட் மாவட்டத்தில் ஷாகீத் லட்சுமண் நாயக் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 6 பேர், கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்தது, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி துறை ரீதியிலான விசாரணை நடந்து வருகிறது. இதுதவிர, மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி இயக்குநரான சந்தோஷ் மிஷ்ராவும், தனியாக நிபுணர் குழுவினருடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவருடைய குழுவினர் நோயாளிகள் உள்பட பலருடன் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா சுகாதார மற்றும் குடும்பநல மந்திரி முகேஷ் மகாலிங், மாவட்ட கலெக்டருடன் இணைந்து இன்று அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது நோயாளிகளின் உடல்நலம் பற்றி கேட்டறிந்து கொண்டார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம், நோயாளிகள் உயிரிழக்கும் வகையில் என்ன நடந்தது என்பது பற்றி ஒரு தெளிவான விளக்கம் அளிக்கும்படி நான் கேட்டுள்ளேன். நோயாளிகளின் பாதுகாப்பே முன்னுரிமையான விசயம் ஆகும். அலட்சியத்துடன் நடந்து கொண்டது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டு உள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். 6-வது நபர் நேற்று அதிகாலை 3.33 மணியளவில் பலியானார். இந்த விவகாரத்தில், அலட்சியம் மற்றும் தவறாக ஊசி செலுத்தப்பட்டது உயிரிழப்புக்கான காரணம் என வெளியான குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/o7x2g4S
via IFTTT
0 Comments