செய்திகள்

சேலம்,

9-வது டி.என்.பி.எல். தொடர் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த் - கேப்டன் அபிஷேக் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் அந்த அணி 47 ரன்கள் அடித்தது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவர்களில் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஹரி நிஷாந்த் 31 ரன்களில் (28 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரேம் குமார் 7 ரன்களிலும், சிலம்பரசன் ஒரு ரன்னிலும் ராஜேந்திரன் விவேக் 3 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து விளையாடிய கேப்டன் அபிஷேக் (47 ரன்கள்) அரைசதத்தை நெருங்கிய தருவாயில் போல்டானார். இறுதி கட்டத்தில் சன்னி சந்து ( 30 ரன்கள்), முகமது (28 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் அடித்தது. சேப்பாக் தரப்பில் 4 ஓவர்கள் வீசி வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த பிரேம் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் ஆஷிக் மற்றும் மொகித் ஹரிஹரன் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்த ஜோடியில் ஹரிஹரன் 32 (22) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இதனைத்தொடர்ந்து ஆஷிக்குடன், ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரை சதத்தை பதிவு செய்திருந்த ஆஷிக் 56 (36) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் 2 ரன்னில் வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து ஜெகதீசனுடன் கேப்டன் அபராஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியில் கலக்கிய ஜெகதீசன் 24 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில், 50 (25) ரன்களில் கேட்ச் ஆனார்.

முடிவில் அபாராஜித் 10 ரன்களும், சுவப்நில் சிங் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சேப்பாக் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.

சேலம் அணியின் சார்பில் அதிகபட்சமாக நிஷாந்த், முகமது, பொய்யாமொழி, மணிகண்டன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் சேலம் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, டி.என்.பி.எல். 2025 தொடரின் தனது 5-வது தொடர் வெற்றியை பதிவு செய்துடன் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/faGkJAc
via IFTTT

Post a Comment

0 Comments