
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு, மீண்டும் தேர்தல் நெருங்கும்போது, வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றும் தி.மு.க.வின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வது, கடுமையான கண்டனத்துக்குரியது.
தனது தேர்தல் வாக்குறுதி எண் 389ல், இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு, மொத்தம் 20 ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறியிருந்ததை, நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தற்போது இன்னும் ஒரு ஆண்டில் தேர்தல் வரவிருப்பதால், குழப்பமான ஒரு அரசாணையை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. அரசு.
இந்த அரசாணையின்படி, கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த காவல்துறையினருக்கு, எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வுக்கு, மொத்தம் 23 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என்றும், 2011-ம் ஆண்டுக்கு முன்பாகப் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மொத்தம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை என்றும் பிரிவினையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தக் குழப்பத்தை ஏற்படுத்தவா நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டீர்கள் என்ற கேள்வி, காவல்துறையிடையே எழுந்துள்ளது. இந்தத் தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்க, தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததைப் போல, காவல்துறையினரின் மொத்த பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மொத்தம் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தும், இன்னும் தலைமைக் காவலர்களாகவே இருக்கும் காவலர்கள் அனைவருக்கும், எஸ்.எஸ்.ஐ. பதவி உயர்வு கிடைக்குமாறு, அரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/pVo092Y
via IFTTT
0 Comments