புதுடெல்லி,
மராட்டிய மாநிலம் மும்பை மேற்கு புறநகர் மின்சார ரெயில் பாதையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி 7 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில் 189 பேர் பலியானார்கள். 827 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தது. அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்த ஐகோர்ட்டு ''குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக அவர்களை சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்'' என உத்தரவிட்டது.
19 ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து மராட்டிய மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் வினோத் சந்திரன், அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மராட்டிய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு குறித்து வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ''இது ஒரு தீவிரமான விஷயம். இந்த மனுவை தயவுசெய்து அவசர வழக்காக பட்டியலிட வேண்டும். சில முக்கியமான பிரச்சினைகள் பரிசீலிக்கப்பட உள் ளன'' என வலியுறுத்தினார்.
ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து 8 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தாக வந்த செய்திகளை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயும் சுட்டிகாட்டினார். இதை தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டதை கவனத்தில் கொண்டு, மராட்டிய மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வியாழக்கிழமை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/F0rcKtN
via IFTTT
0 Comments