தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் வெகு சிறப்பான ஆலயம் ஆகும். இந்த மாதாவை ஜாதி மத வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் வழிபட்டு அருள் பெற்று செல்வது வழக்கம். உலகப் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு திருவிழா வருகிற 26-ம்தேதி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் வைத்து பேராலய பங்குத்தந்தை ஸ்டார்வின் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:
தூத்துக்குடி மாநகர திருவிழாவாக கொண்டாடப்படும் பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 26-ம் தேதி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திருவிழாவிற்காக வருகிற ஜூலை 25ஆம் தேதி மாலை கொடிபவனி நடைபெறுகிறது. கொடிபவனியின்போது ஏராளமான பக்தர்கள் மாதாவிற்காக பல்வேறு காணிக்கைகளை அளிப்பர். அதில் குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டி மாதுளம் பழங்களை அளிப்பர். இந்த மாதுளம் பழங்கள் மாதாவிடம் ரட்சிப்பு செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பனிமய மாதா பேராலயத்தில் நான்கு ஜெபமாலை பூஜைகள் நடைபெறும் இதில் உலக நன்மை, மீனவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கப்பல் மாலுமிகள் என அனைவருக்கும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ம்தேதி நற்கருணை பவனியும் 4-ம்தேதி மாலை ஹைதராபாத் உயர் மறை மாவட்ட பேராயரும் கதிர்ட்டலுமான அந்தோணி பூலா ஆண்டகை கலந்து கொள்கிறார்.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆகஸ்ட் மாதம் 5-ம்தேதி காலை ஆலய வளாகத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா திருப்பலி பின்னர் இரவு பனிமய மாதா சப்பரபவனி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகரின் திருவிழாவான இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது உதவி பங்குத்தந்தை பிரவீன்ராசு, பேராலய குழு துணைத் தலைவர் அண்டோ, செயலாளர் எட்வின் பாண்டியன், துணை செயலாளர் பெனாட், பொருளாளர் சோரிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/doBS8Da
via IFTTT
0 Comments