சென்னை,
திருமணத்துக்கு முன்பு தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பெண் வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து, இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அபுடுகுமார் ஆஜராகி, ''பெண் வக்கீலின் அந்தரங்க வீடியோ இன்றும் 13 இணையதளங்களில் உள்ளன. இந்த வீடியோவை முடக்க வேண்டும். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, 1,400 சட்டவிரோத இணையதளங்களை முடக்கிய மத்திய அரசால், இந்த 13 இணையதளங்களை முடக்க முடியவில்லை'' என்று வாதிட்டார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் குமரகுரு, "இந்த விவகாரம் குறித்து நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருகிறது. எனவே இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, ''ராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்ட, வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் அழிக்க, அழிக்க, மீண்டும், மீண்டும் இணையத்தளங்களில் உலா வருகின்றன" என்று வேதனை கருத்து தெரிவித்தார்.
மேலும், ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவில் உள்ள 1,400 சட்ட விரோத இணையதளங்கள் முடக்கப்பட்டது போல இந்த ஆபாச இணையதளங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/aIZ5b3h
via IFTTT
0 Comments