செய்திகள்

அபுதாபி,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி மட்டும் தகுதி பெற்றுள்ளது.

இதில் இன்று நடைபெற்ற 9 வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக சைப் ஹாசன் மற்றும் தன்சித் ஹசன் தமீம் ஆகியோர் களம் கண்டனர்.

இதில் சைப் ஹாசன் 30 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் கண்ட கேப்டன் லிட்டன் தாஸ் 9 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்சித் ஹசன் தமீம் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து தவ்ஹித் ஹிரிடோய் மற்றும் ஷமிம் ஹொசைன் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தன்சித் ஹசன் தமீம் 52 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அடல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். குர்பாஸ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்காளதேச அணியின் அபார பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/yCYzlHt
via IFTTT

Post a Comment

0 Comments