செய்திகள்

மும்பை,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாண்ட்னர் அதிகபட்சமாக 47 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா 44 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், அபிஷேக் (0) ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், கேப்டன் சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் இந்திய அணி 15.2 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் 37 பந்துகளில் 82 ரன்களும், ஷிவம் துபே 18 பந்துகளில் 36 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அந்த அணியின் மேட் ஹெண்ட்ரி, ஜாக்கப், இஷ் ஷோதி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.



from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/eOs8gUI
via IFTTT

Post a Comment

0 Comments