கல் தோன்றி
மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய
மூத்தகுடி
நம் தமிழ்க் குடி.
இந்தக் குடிப் பெருமையை நாம்
எங்கிருந்து கைக்கொள்வது?
தமிழரின் கலாச்சாரத்தை
வருங்கால சந்ததியினருக்குக்
கடத்துவது எது?
விளை நிலமான
வீர வரலாற்றை
விவரிப்பது எது?
பாரம்பரியமிக்க
பண்பாடுகளை
பறைசாற்றுவது எது?
இதிகாசங்களும்
இலக்கியங்களும்
இயம்புவது என்ன?
ஐம்பெரும் காப்பியங்களில்
அடங்கி இருக்கும்
அழகியலை
எப்படி அறிந்து கொள்வது?
திருவாசகத் தேனைப்
பருகுவது எப்படி?
திருக்குறள் எனும் உலகப் பொதுமறையை
உள்ளத்தில் ஏற்ற வேண்டாமா?
திருமூல மந்திரத்தை
தரணி வாழ் மக்களுக்கு
திருப்பித் தருவது எது?
இமயத்தில் புலிக்கொடி
நாட்டிய காட்சியை
காட்டுவது எது?
கடல் கடந்து
வாணிபம் செய்த
பொருளாதார
சிந்தனைப் பொக்கிசத்தை
போற்றிப் பாதுகாக்க வேண்டாமா?
சமுதாயத்தை மலரச் செய்த
சான்றோர்களின்
புகழைப்
பூமியில்
நிலை நிறுத்துவது எப்படி?
ஆயக்கலைகள் அறுபத்து நான்கை
அறிய வேண்டாமா?
நோய் தீர்க்கும் தமிழரின் மருத்துவம்
முறைகளை, மூலிகைகளை
முகர்வது எப்படி?
செம்மொழி என்றால் என்ன,
அது தமிழுக்கு எப்படி கிடைத்தது?
தடங்கள் அறிய வேண்டாமா?
அடுக்கிக் கொண்டே போகலாம்
அன்னைத் தமிழின் அருமையை!
இலக்கண,இலக்கிய,
இதிகாசங்கள் ஏராளம்.
காவிய,காப்பியங்கள்
கணக்கில் அடங்காது.
கீழ்க்கணக்கு, மேல்கணக்கு,
அகம் புறம் என ஆயிரக்கணக்கில்.
செம்மொழிப் பெருமை
உன்மொழிக்கு
.சிந்தனையில்
வைத்துக் கற்றிடுவாய்.
மொழி இல்லையேல்
உனக்குத்
தமிழன் என்ற
முகவரியில்லை.
விழித்துக் கொள்வோம்.
தாய்மொழித் தமிழைத்
தழைத்தோங்கச் செய்வோமே.
3 Comments
💐💐💐
ReplyDeleteஇலக்காம் இதிகாச
ReplyDeleteஇன்பத்தை வாழ்வில்
விலக்காமல் வாழ்வியலை வாங்கு.!
"குறட்பா"
திகழ்ந்தெங்கும் மூத்ததமிழ்
ReplyDelete........திக்கெட்டும் பொங்கும்
அகழ்ந்தெடுத்த முத்தாம் அது.!
குறட்பா