காற்றின் கோபம்.
கோபமுற்று வீசிய
காற்றில்
காட்சி தந்தார் கடவுள்.
காற்றில்
காட்சி தந்தார் கடவுள்.
ஏனிந்த கோபம்?
கடவுள் கேட்டார்
காற்றிடம்.
என்னை புகையிலைக்
குழாயில்
உறிஞ்சுகின்றான்
புதைகுழியில் தள்ள.
வாகனப்புகையால்
என்னை
எமவாகனத்தில்
ஏற்றிக்
கொல்கின்றனர்.
ஆலைப்புகையால்
மேனிகறுத்து
மோசமாய்
உலவுகின்றேன்.
இன்னும் பல
மாசம்புகள் எய்வதாக
குற்றப்பத்திரிக்கை
வாசித்தது காற்று.
நீதிபதிக் கடவுள்
சாட்சிகளாக
காட்சிகளை
விசாரித்தது.
மூச்சடைத்த
காட்சிகள்
மூர்க்கமாய் கூறின
உண்மையை.
குற்றம் நிரூபணமானது.
நீதிபதி தீர்ப்பாய்க் கூறினார்
காற்றிடம்..
மாசு தந்த
மனிதனுக்கு
தண்டனை தர
உனக்கு
ஒருநாள் விடுப்பு.
சற்றே தலைகுனிந்தது காற்று.
நாளை
மலரும் மலர்களை
மனதில் நினைத்தது.
நாளை
பிறக்கும்
பச்சிளம் குழந்தைகளை
நினைத்தது.
தீர்ப்பு எழுதுவதற்க்குள்
பிடுங்கப்பட்டது
எழுத்தாணி
காற்றால்.
மானுடம் வாழ
நான் மாசானாலும்
பரவாயில்லை
மனுவைத் திருப்பித் தர
மன்றாடியது காற்று.
கைமாறியது
குற்றப்பத்திரிக்கை
கடவுளின் கையிலிருந்தது
காற்றின் கையில்
0 Comments