தூரலின் வருகையில்
துள்ளுமே மழலைகள்.
துள்ளியே குதிக்கும்
தூரலில் நனையவே!
மேகக் கைகளில்
துளி அட்சதைகள்.
தேகம் நனைத்து
வாழ்த்துகிறதே வான்மழை.
மழைக்குப் பின்
மலருமாம் வசந்தம்.
மழையிலேயே மலர்கிறது
மழலைகளின் வசந்தம்!
வசந்தமென்ற வார்த்தையில்
வராது வாண்டுகளுக்கு
நிசமான வசந்தம்
நீரில் விளையாடுவதே.
வருணன் வீசும்
வெள்ளிக் காசுகளை
வரமாய்க் கரமேந்தி
சிதறடிக்கும் சிறார்கள்.
தாளங்கள் சொல்லும்
மழையின் சத்தம்
ஆனந்த நடனம்
அரங்கேறும் தருணம்.
இலைக்கப்பல்களை இயக்கும்
மாலுமிச் சிந்தையர்
அலைகடலாய் ஆர்ப்பரிப்பர்
அங்கம் நனைக்க.
வான்மழைத் தூரலில்
வாராதே நோய்கள்
தேன்மழைத் துளியென்றே
சுவைத்திடுமே சேய்கள்.
இயற்கை மழையில்
இணையும் மழலைகளை
இடையூறு செய்யாமல்
இனிதே காப்போம்.
பாரில் வளமை
நீரால் அமையுமே
நீரின் பெருமையை
இளநெஞ்சில் ஏற்றுவோம்.
வற்றாத நிலையை
வருங்காலம் பெறவே
விதைத்து வைப்போம்
நீரின் சேமிப்பை.
0 Comments