திண்டுக்கல்,
8 அணிகள் இடையிலான 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் இரு அணிகளும் களம் புகுந்தன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக மான் பாப்னா 50 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களம் புகுந்தது. திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வசீம் அகமது மற்றும் ராஜ்குமார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் வசீம் அகமது 10 ரன், ராஜ்குமார் 8 ரன், அடுத்து வந்த ஷியாம் சுந்தர் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய நிர்மல் குமார் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் சஞ்சய் யாதவ் 16 ரன், ஆர். ராஜ்குமார் 19 ரன், ஆண்டனி தாஸ் 4 ரன், சரவண குமார் 7 ரன், அதிசயராஜ் டேவிட்சன் 6 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் 16.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த திருச்சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் திருப்பூர் அணி 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருப்பூர் தரப்பில் நடராஜன், அஜித் ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் திருப்பூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/ilKesxB
via IFTTT
0 Comments