செய்திகள்

பெங்களூரு,

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.18 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளதால், அந்த அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு அணி வீரர்களுக்கு சின்னசாமி மைதானத்தில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. முன்னதாக கர்நாடக பேரவை மாளிகை முதல் சின்னசாமி மைதானம் வரை பெங்களூரு அணி வீரர்களின் பேருந்து பேரணி நடத்தப்பட்டது.

பெங்களூரு அணியை வரவேற்க மைதானத்தின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இதனிடையே, சின்னசாமி மைதானத்தின் 6-வது கேட் பகுதியில் பலர் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆர்.சி.பி. நிர்வாகம் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். அனைவரின் பாதுகாப்பும் நல்வாழ்வும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. துயரமான உயிரிழப்புக்கு ஆர்.சி.பி அணி இரங்கல் தெரிவிக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நிலைமை குறித்து அறிந்தவுடன், நாங்கள் உடனடியாக எங்கள் திட்டத்தைத் திருத்தி, உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையைப் பின்பற்றினோம். எங்கள் அனைத்து ஆதரவாளர்களையும் தயவுசெய்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/k20SBI4
via IFTTT

Post a Comment

0 Comments