துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்த தொடரின் சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. இந்நிலையில், இந்த சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 58 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் கண்டது.
இந்தியாவின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் கண்டனர். இந்த இணை பாகிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இதில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். மறுபுறம் சுப்மன் கில் 47 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டும் ஆகினர்.
தொடர்ந்து திலக் வர்மா களம் கண்டார். அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 74 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சஞ்சு சாம்சன் களம் புகுந்தார். இறுதியில் இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74 ரன்கள் எடுத்தார்.
இந்த மோதலில் அபிஷேக் சர்மா 24 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தப்பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் (23 பந்து) முதல் இடத்திலும் , அபிஷேக் சர்மா (24 பந்து) 2வது இடத்திலும், யுவராஜ் சிங் (29 பந்து) 3வது இடத்திலும் உள்ளனர்.
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/AcaNej3
via IFTTT
0 Comments