செய்திகள்

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாவதைத் தடுக்கும் நோக்கில் 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் புதிதாக ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ், மீத்தேன் போன்றவற்றை எடுக்கும் பணிகளை தடை செய்கிறது.

இந்தச் சூழ்நிலையில், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளான பெரியகுடி, திருவாரூர், அன்னவாசநல்லூர் போன்ற இடங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தால் மூன்று ஷேல் கேஸ் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாக 2024-25-ம் ஆண்டிற்கான எரிசக்தி இயக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இதன்மூலம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் Hydraulic Fracture முறையில் மட்டும் நிறைவேற்ற சாத்தியமுள்ள ஷேல் கேஸ் ஆய்வு கிணறுகளை தோண்டியிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் மேற்படி நடவடிக்கை தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது.

வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் நடைபெற்றுள்ள விவசாயிகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கைபை அந்த நிறுவனத்தின் அறிக்கை மூலமாக தெரிந்து கொள்ளும் அளவுக்கு தி.மு.க. அரசின் செயல்பாடு உள்ளது வெட்கக்கேடானது. இந்த நடவடிக்கையை தி.மு.க. அரசு முன்கூட்டியே கண்காணிக்காதது, இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நடவடிக்கைக்கு திமுக அரசு துணை போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மன்னார்குடி பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டம், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் எரிவாயு எடுக்கும் திட்டம், வடசேரி பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் என பல திட்டங்களை நிறைவேற்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் துடித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அந்த நிறுவனத்தின் நடவடிக்கையை கண்காணிக்காதது தி.மு.க அரசின் மெத்தனப் போக்கினைக் காட்டுகிறது. தி.மு.க அரசின் அக்கறையின்மைக் காரணமாக சோலைவனமாக இருக்கின்ற பகுதிகள் எல்லாம் பாலைவனமாக மாறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து அந்தச் சிறப்புடன் நிகழும் வகையில், இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் மேற்படி பகுதிகளில் ஷேல் கேஸ் கிணறுகளை தோண்டியுள்ளது குறித்து ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை வெளியிடவும், சட்டத்திற்கு புறம்பாக ஷேல் கிணறுகள் தோண்டப்பட்டு இருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கவும் முதல்-அமைச்சர் அவர்கள் முன்வர வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/EavsdQD
via IFTTT

Post a Comment

0 Comments